வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி: திருவள்ளூரில் "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி-2012' என்ற தலைப்பில், நடந்த அறிவியல் கண்காட்சியில், ஆழ்துளை குழாய் கிணற்றில் சிக்கும் குழந்தைகளை மீட்க, தான் கண்டுபிடித்துள்ள கருவி குறித்து செயல் விளக்கம் அளிக்கிறார்கள் சரண் மற்றும் கோபால கிருஷ்ணன்.
புதுச்சேரியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் ‘வீட்டுக்கொரு விஞ்ஞானி’ அறிவியல் கண்காட்சியில், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்பித்த மாணவ, மாணவிகளுக்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்பட்டது.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய தலைமுறையின் சார்பில் வீட்டுக்க ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இதில், ஆர்வமுடன் பங்கேற்று தங்களை படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற கண்காட்சியில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டார்.
இதில் சீனியர் பிரிவில், அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கவுசிகா, ஹாரீஸ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். சமையல் எரிவாயுவை சேமிப்பது குறித்த கண்டுபிடிப்புக்காக இவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இளவேந்தன் மற்றும் பிரதீப்புக்கு 2வது இடமும், அனீஷ் பாத்திமா மற்றும் ஹேமாவதி 3வது இடமும் பிடித்தனர்.
ஜூனியர் பிரிவில் முதலியார் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த யுவராஜன் மற்றும் கவிதன் ஆகியோர் இளம் விஞ்ஞானிகள் விருதுக்கு தேர்வாகினர். குப்பையை மறுசுழற்சி செய்து உரமாக பயன்படுத்துவது குறித்த கண்டுபிடிப்பிற்காக இவர்கள் விருதுக்கு தேர்வாகினர். சசி கிருஷ்ணா மற்றும் காமாட்சி ராஜூக்கு 2வது இடமும், ஹேமா ஸ்ரீ மற்றும் செவ்வந்தி 3வது இடமும் பிடித்தனர்.
முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங், விருது வழங்கிப் பாராட்டினார்.
புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தலைமுறை சார்பில் அறிவியல் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படைப்புகள், ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும்.