திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை பகுதியில் டயர் கம்பெனி கட்டுமான
பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி ஒருவர்
உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம்
தரக்கோரி 5,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இறந்தவரின் உடலை வாங்க
மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையை அடுத்துள்ள தேர்வாய் கண்டிகையில்
சிப்காட் தொழிற் பூங்கா உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு,
மிசிலின் என்ற ஜெர்மனிய தொழில் நுட்பத்துடன் கூடிய தனியார் டயர் தொழிற்சாலை
கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமானப் பணியின்போது நேற்று திடீரென கட்டடத்தின் சுவர் இடிந்து
விழுந்ததில், கட்டட இடிபாடுகளில் சிக்கி, ஒடிசாவைச் சேர்ந்த கோகுல பால
என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க
வேண்டும், உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க
வேண்டும் என்று கோரி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை
அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல் துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் தொழிலாளர்களுடன்
பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிலாளர்கள்
போராட்டத்தை வாபஸ் பெற்றனர். எனினும் தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து
அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.