திருவள்ளூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த மூன்று கோடி
ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை தனிப்படை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை
அமைத்து கடந்த 20 நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவு
இரண்டரை மணியளவில் குந்தாலி மேட்டில் தனிப்படை போலீஸார் தேடுதல்
வேட்டையில் ஈடுபட்ட போது ஒரு தோப்பின் கிடங்கில் பதுக்கி வைக்கப்
பட்டிருந்த சுமார் 30 டன் அளவிலான செம்மரக் கட்டைகளை தனிப்படை போலீஸார்
கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் கிடங்கு உரிமையாளரான
சீனிவாசனை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள்
வனத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டது. இதன் மதிப்பு சுமார் மூன்று கோடி
ரூபாய் இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த கட்டைகள் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட இருந்ததாக
கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.